‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு மொழியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை, செப்புப் பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும்.

ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவரான எழுத்தாளர் தேவிபாரதி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 40 ஆண்டு காலமாக எழுத்துலகில் இயங்கி வரும் இவரது படைப்புகள், எளிய மக்களின் வாழ்வியலை அச்சுப் பிசகாமல் பிரதிபலிப்பவை. அவரது மூன்றாவது நாவல் ‘நீர்வழிப் படூஉம்’.

இதனிடையே தனது நீர்வழிப் படூஉம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் தேவி பாரதி, தனது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், சாகித்ய அகாடமி விருது இன்னும் தனக்கு உத்வேகத்தை தரும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழில் தேவி பாரதியை போல் மலையாளர்த்தில் இ.வி.ராமகிருஷ்ணனுக்கும், தெலுங்கில் பதஞ்சலி சாஸ்திரிக்கும், கன்னடத்தில் லட்சுமிஷா தொல்பதிக்கும், இந்தியில் சஞ்சீவுக்கு சாக்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.