நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் சென்றது சர்ச்சையான நிலையில், அது தொடர்பான விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, குமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு அதிகனமழை பெய்யத் தொடங்கியது. 17-ம்தேதி முழுவதும் பெய்த அதிகனமழை 18-ம் தேதி காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் 4 மாவட்டங்களும் மழை நீரால் சூழப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மின்சாரம்,போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர்மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான மாரி செல்வராஜ் தனது சொந்த ஊரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். மேலும் உதவி தேவைபடுபவர்கள் குறித்த விவரங்களையும் தனது பக்கத்தில் பகிர்ந்து வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றும் களப்பணியில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நெல்லையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி பார்வையிடச் சென்ற நிலையில், மாரி செல்வராஜும் அவருடன் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
அமைச்சர் உடனான ஆய்வில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை? என்று சிலர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல.. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:-
நான் இங்கு இயக்குனர் எல்லாம் கிடையாது. இது என் ஊர், என் மக்கள்.. நான் இயக்குனராக இல்லாவிட்டால் கூட இங்கு தான் நிவாரண பணிகளுக்காக அலைந்திருப்பேன்.. அதுவேறு இதுவேறு.. திரும்ப நான் சென்னைக்கு போனால் தான் இயக்குனர். எங்கள் ஊரில் இருந்து போய், வெளியூரில் உள்ளவர்கள் எங்கே என் அம்மாவை காணோம். என் அப்பாவை காணோம் என்று கேட்டு என்னிடம் அழும் போது, அதற்கு தான் நான் பதில் அளிக்க வேணடியது அவசியம் ஆகும். எல்லாருக்கும் என்னை தெரிந்திருப்பதும், என் ஊர் மக்கள் எல்லாரிடமும் என் நம்பர் இருப்பதும் என்னுடைய பலம் ஆகும். எல்லாரும் மாரி செல்வராஜ்கிட்ட சொல்லுவோம் என்று நினைக்கும் போது, அதற்கு நான் எதாவது செய்ய வேண்டும் அல்லவா? வெளியூர்களில் இருந்து ஒவ்வொருவரும், என் அண்ணா, என் அம்மா, அக்கா,அப்பாவுக்கு என்னாச்சு என்று கேட்டு அழும் போது, அந்த வலியும் வேதனையும் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். எப்படியாவது போய் உதவுமாறு கேட்டார்கள். அவர்களுக்காகத்தான் வந்துள்ளேன் என்றார்.
உதயநிதியுடன் வந்தது குறித்து கூறுகையில், நான் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்தேன். அது என் ஊர், என் மக்கள்.. மக்களின் கதறல் குறித்து நான் உதயநிதி ஸ்டாலினிடம் கூறினேன். முன்னதாக சேலத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி வந்திருந்தார். என் குரலில் இருந்த கதறலை கேட்ட உடன், உடனடியாக தூத்துக்குடி வந்தார். பாதிக்கப்பட்ட இடத்திற்கு, வந்தவரிடம் அவ்வளவு விஷயத்தையும் விளக்கி கூறினேன். நாம் நினைப்பது போல் இல்லை.. முழுக்க முழுக்க நீரால் சூழப்பட்ட பகுதி.. இங்கு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதை நான் விளக்கி கூறினேன்.. உதயநிதி வந்த பிறகு தான் நிறைய விஷயங்கள் என் மக்களுக்கு நடந்தது. மின்சாரம் வந்தது. நான் அழைத்து உதயநிதி ஸ்டாலின் உதவ ஓடி வந்தாரே தவிர அவருடன் நான் சேர்ந்து வரவில்லை. இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்தார்.