“ஜக்தீப் தன்கரைப் போல் தனது கட்சி எம்.பி. நடித்துக் காட்டியதை ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்திருக்காவிட்டால் இது பிரச்சினையாகவே ஆகியிருக்காது” எனக் கருத்து தெரிவித்துள்ளார் திரிணமூல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, “நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். நடந்ததை இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராகுல் இதனைக் காட்சிப்படுத்தாவிட்டால் இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகவே ஆகியிருக்காது” என்றார்.
அப்போது நிருபர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சம்பவத்தை ஆதரிக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பபட, “நான் மேற்கு வங்கம் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர வேறு எது பற்றியும் பேச விரும்பவில்லை” என்றார்.
முன்னதாக மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்தார். அந்த சந்திப்பு தொடர்பாக பேசிய மம்தா, “நான் இன்று எங்கள் மாநிலத்துக்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் படி மேற்குவங்கத்துக்கு உள்ள ஊதிய நிலுவையைக் கேட்க வந்தேன். அரசியல் சாசனப்படி இந்ததிட்டத்துக்கான ஒதுக்கீடு எங்கள் மாநிலத்துக்கும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது கிடைக்கவில்லை. அது ஏழை மக்களின் வேலைக்கான ஊதியம். மாநிலம் 2022-23 காலகட்டத்தில் மழையால் சேதத்தை சந்தித்தது. அப்போதும் கூட 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. ஊரக வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சுகாதாரத் திட்டங்களும் முடங்கியுள்ளன. நிதி கமிஷன் ஒதுக்கீடுகளும் வந்தபாடில்லை. இதற்கு முன்னரும் மூன்று முறை பிரதமரை சந்தித்துவிட்டேன். இவ்விவகாரம் தொடர்பாக மத்தியக் குழு மாநில அரசுப் பிரதிநிதிகளை சந்திக்கும் என்றார். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை” என்றார்.
மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (டிச.19) காலை பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதைப் போல நடித்துக் காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
பாஜக இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், “அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி (மிமிக்ரி) செய்யும் எம்.பி.,யை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இவை சர்ச்சையான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக தன்கர் தனது எக்ஸ் சமூகாலைதளப் பக்கத்தில், “சில மாண்புமிகு உறுப்பினர்கள் அரங்கேற்றிய மோசமான நாடகம் குறித்தும், அது மாட்சிமை பொருந்திய நாடாளுமன்ற வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டது குறித்தும் மிகுந்த வலியடைந்ததாக பிரதமர் மோடி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதுபோன்ற சிறுமைகளை 20 வருடங்களாக தான் அனுபவித்து வருவதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவருக்கு, அதுவும் குடியரசு துணைத் தலைவருக்கே, நாடாளுமன்ற வளாகத்திலேயே அத்தகைய சம்பவம் நடந்தது துரதிர்ஷடவசமானது என்று பிரதமர் கூறினார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.