தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன?: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்பது பற்றி ராஜ்யசபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் இந்த மாதம் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டன. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக இந்த 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இயல்பு மழை அளவை விட அதிகளவில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 4 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பை சந்தித்தது. திருநெல்வேலி நகர் மற்றும் பல கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதையடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இரு மாவட்டங்களிலும் மழை குறைந்துள்ள நிலையில் இயல்பு நிலை என்பது படிப்படியாக திரும்பி வருகிறது.

இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் பாதிப்பால் வெள்ளத்தை சந்தித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் கொட்டித்தீர்த்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை நேற்று சந்தித்து கோரிக்கை வைத்தார். அதோடு தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் திமுக எம்பிக்களும் இந்த கோரிக்கையை லோக்சபா, ராஜ்யசபாவில் முன்வைத்து பேசியிருந்தனர். இதற்கிடையே தான் மத்திய அரசு சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக அரசுக்கு தேவையான உதவிகள் செய்வதில் தாமதம் காட்டப்படுவதாக திமுக உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் தென்தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு உடனடியாக செய்த உதவிகள் என்னென்ன? என்பது பற்றி நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்டியலிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தென்தமிழக மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து டிசம்பர் 18ம் தேதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 மீட்புக் குழுக்கள் தென் தமிழகத்திற்காக அனுப்பப்பட்டன. இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 8 குழுக்கள், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2 குழுக்கள் சென்றன. அதோடு சென்னை மண்டல மீட்பு மையத்தில் ஒரு குழு, இப்போதும் அரக்கோணம் தலைமையகத்தில் இரண்டு அணிகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு மொத்தம் 13 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தமிழகத்தில் உள்ளன. இதுதவிர 8 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டு, கூடுதல் ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்திய கடலோர காவல்படையின் ஒரு கப்பல் மீட்பு மற்றும் நிவாரண பொருட்களுடன் அங்கு நிலைநிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. 19 மீட்பு குழுக்கள் 4 மாவட்டங்களிலும் உள்ளன. இதில் ராணுவத்தை சேர்ந்த 2 குழுக்கள், கடலோர காவல்படையை சேர்ந்த 7 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 10 குழுக்களும் அடங்கும்.

மேலும், 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதி (SDRF) ரூ. 1,200 கோடியாகும். இதில் ரூ.900 கோடி மத்திய அரசின் பங்காக இருக்கிறது. தமிழக அரசின் அறிக்கையின்படி, 2023 ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி மாநில பேரிடர் மீட்பு நிதி கணக்கில் உள்ள இருப்பு ரூ.813.15 கோடி. நடப்பு 2023-24ம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்திய பங்கான ரூ.450 கோடியின் முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 2வது தவணையாக ரூ. 450 கோடியும் 2023 டிசம்பர் 12ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு , சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ அல்லது மறந்துவிடவோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.