விக்ரம் மற்றும் இயக்குனர் அருண்குமார் கோவா சென்றுள்ளனர்!

தமிழ் சினிமாவில் பிரதானமாக நடித்து வருகிறார் நடிகர் விக்ரம். தங்கலான், துருவநட்சத்திரம் என ரிலீஸுக்கு இரண்டு படங்களை கையில் வைத்திருக்கும் விக்ரம், இப்போது இயக்குனர் அருண்குமாருடன் கோவா சென்று இருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சியான் விக்ரம் தமிழ் படங்களில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார். மிகவும் சவாலான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு விக்ரமுக்கு நல்ல கம் பேக்காக அமைந்திருந்தது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் துருவநட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. துருவநட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் எப்போது இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் படக்குழு வெளியிடவில்லை.

அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் டீசர் நவம்பர் மாத ஆரம்பத்தில் வெளியானது. தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் விக்ரம் நடித்திருந்த சில காட்சிகள் பட குழுவில் இருபவர்களுக்கு திருப்தி கொடுக்காததால் மீண்டும் அந்த காட்சிகளை படப்பிடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதனால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் திடீரென விக்ரம் இயக்குனர் ஒருவருடன் கோவாவிற்கு சென்று இருக்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அருண்குமார். சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படத்தை இவர் இயக்கியிருந்தார். சித்தா படத்தை தொடர்ந்து அருண்குமார் விக்ரமுடன் இணைந்து இருப்பதாக அவர்கள் அறிவித்திருந்தார்கள். இயக்குனர் அருண்குமார் மற்றும் விக்ரம் இணையும் இந்த திரைப்படம் விக்ரமின் 62வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சியான் 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியானது.

அதனை அடுத்து தற்போது ப்ரீ-ப்ரொடக்ஷன் மற்றும் திரைகதை கலந்துரையாடலுக்காக விக்ரம் மற்றும் இயக்குனர் அருண்குமார் கோவா சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சியான் 62 படத்திற்கான திரைக்கதையை டிஸ்கஸ் செய்த பிறகு தங்கலான் படத்தின் பிரமோஷனில் விக்ரம் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தங்கலான் படத்தை தொடர்ந்து சியான் 62 படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.