தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குமரிக் கடலில் நிலை கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை தென் தமிழ்நாட்டில் பெருமழையை கொட்டித் தீர்த்தது. ஒரு ஆண்டு முழுவதும் பெய்யக் கூடிய 95 செமீ மழை, ஒரே நாளில் காயல்பட்டினத்தில் கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களிலும் வெள்ளம் கரை புரண்டோடியது. அணைகள் நிரம்பியன்; அருவிகள் ஆக்ரோஷமாகின; தாமிரபரணி நதியில் 1 லட்சம் கன அடி வெள்ள நீர் பாய்ந்தோடியது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல நூறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தனி தீவுகளாக தத்தளிக்கின்றன. வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில பேரிடர் குழுக்களுடன் முப்படைகளும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் படையை களமிறக்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து மிக்ஜாம் புயல், தென் தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளுக்கு ரூ12,659 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். டெல்லியில் இருந்தபடியே தென் தமிழ்நாட்டின் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். சென்னைக்கு நேற்று திரும்பிய நிலையில்ன் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண மையங்களில் உள்ள மக்களுடன் வீடியோ கால் மூலமாக உரையாடி அவர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள், உணவு, மருத்துவ உதவிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அத்துடன் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். இன்று காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தை காலை 11.45 மணிக்கு சென்றடைந்தார். தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் .