“தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இது ஆரம்பம்தான், மேலும் சில திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்” என அமைச்சர் பொன்முடி சிறைத்தண்டனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது.
பொன்முடி மீதான இத்தீர்ப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை மேலும் பேசுகையியல், “பாஜக இத்தீர்ப்பை வரவேற்கிறது. தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் இல்லாத சமுதாயம் அமைய இது ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்புகிறோம். இது ஆரம்பம்தான். 2024ம் ஆண்டு மத்தியில் இன்னும் நான்கைந்து திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். இன்றைய தீர்ப்பு பணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவுக்கு அனைத்தையும் புரட்டிப்போடும் தீர்ப்பு. நீதித்துறையின் செயல்பாட்டையும் ஆளுங்கட்சியையும் தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. பாஜகவில் இணைவார்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது எங்கள் மீதான பொய் குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தனது எக்ஸ் தளத்தில் பொன்முடி தீர்ப்பு குறித்து கருத்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, “மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.