பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்சி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் வீராங்கனைகள் ஈடுபட்டு இருந்தனர். கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர். அப்போது விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பின்னரே பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த சம்மேளனம் தடை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது. இதன்பின்னர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். உத்தர பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளர் ஆவார்.
சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் சாக்சி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பேட்டியின் போதே கண்கலங்கிய சாக்சி மாலிக், தனது ஷூவையும் எடுத்து மைக்குகள் முன்பு வைத்தார்.
40 நாட்களாக நாங்கள் சாலையில் படுத்து தூங்கினோம். எங்களுடைய போராட்டத்திற்கு பல மக்களும் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் சிங்கின் நண்பர் தற்போது இந்திய மல்யுத்த சமநிலத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நான் மல்யுதத்தில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று அவர் கூறினார்.