ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளாா்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், பொன்முடி மீதான குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2006-11 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டிருப்பது, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் பொன்முடி விடுவிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது.
இன்று தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி 2022ல் சென்னை உயர் நீதிமன்றம், அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்தவழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில்தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கில் பொன்முடியை காப்பாற்ற நடந்த அதிகார அத்துமீறல்களை கண்டித்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு உயர் நீதிமன்றமே அதிர்ச்சி தெரிவித்தது. தமிழ்நாடு முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது அவர்கள் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற திமுக தொடர்ந்த வழக்கே காரணம். இப்போது திமுக அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கனவே திமுகவே உருவாக்கிய முன்னுதாரணத்தின்படி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.