கனமழை வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மழை குறித்து சரியாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி திடீரென மழை தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்கு புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
ரயில் போக்குவரத்தை பொறுத்த அளவில் டிச.17ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயில் பாதையில் முழுவதும் மழை தேங்கியது. குறிப்பாக தாதன்குளத்தில் ரயில் தண்டவாளத்தின் கீழே இருந்த ஜல்லி கற்கள், மண் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த ரயிலில் சிக்கியிருந்த 500க்கும் அதிகமானோர் 2 நாட்களுக்கு பின்னர்தான் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது” என்று கூறியிருந்தார். சோஷியல் மீடியாக்களிலும் வானிலை அறிவிப்பு குறித்து விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வானிலை மையத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கிய அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள வானிலை மையத்தை மூடி விட வேண்டும். அது தேவையில்லாதது, வேஸ்ட்! இந்த வேலையை ஐந்தாவது வகுப்பு படிக்கும் பையன் செய்துவிட்டு போவான். ஆய்வு மையத்தில் என்ன சொல்லுவாங்க? ‘தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் கொஞ்சம் கனமான மழை பெய்யும். இன்னும் சில மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்யும்’ இது எங்களுக்கு தெரியாதா? நீங்க சொல்லிதான் எங்களுக்கு தெரியனுமா? அப்புறம் எதுக்கு நீங்க தொழில்நுட்பம் வைத்திருக்கிறீர்கள்? உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனால் சுதந்திரத்துக்கு முன்னர் எந்த நிலையில் இருந்தீர்களோ அதே நிலையில் தான் நீங்கள் இப்போதும் இருக்கிறீர்கள். நீங்கள்தானே மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் இந்த பகுதியில் இவ்வளவு மழை பெய்யும், என நீங்கள்தானே சொல்ல வேண்டும்.
அமெரிக்காவில் செய்ய முடிகிறது உங்களால் இங்கு செய்ய முடியாதா? அமெரிக்காவில் குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெளிவாக எச்சரிக்கை கொடுக்கிறது. இதைக் கொண்டுதான் அந்த பகுதி மக்கள் அன்றைய நாளை திட்டமிடுவார்கள். ஆனால் இங்கு சென்னையில் 40 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களில் வெறுமனே ஆரஞ்சு அளவு மட்டும்தான் கொடுக்கப்பட்டது. எவ்வளவு மழை பெய்யும் என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.