“தென்தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யவிருக்கிறார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளமும், தென்தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தையும் தமிழக அரசு மிக மோசமாக கையாண்டிருப்பதாக இந்தியாவில் உள்ள அனைவருமே பேச ஆரம்பித்துள்ளனர். தூத்துக்குடி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 20-ம் தேதியில் இருந்து, மத்திய அரசின் மத்திய குழுவினர் தென் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் அங்கு டிச.21-ம் தேதியன்று செல்கிறார். கிட்டத்தட்ட, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 4-5 நாட்கள் கழித்து முதல்வர் சென்று பார்வையிடுகிறார். தமிழக அரசு நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசை வம்புக்கு இழுப்பதில்தான், முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றது.
மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யவிருக்கிறார். தூத்துக்குடி முழுவதும் நிதி அமைச்சர் ஆய்வு செய்யப் போகிறார். தமிழக அரசு அந்த மாவட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. அந்த மாவட்ட நிவாரணப் பணிகளில் இன்னும் அக்கறை காட்டவில்லை. இந்த நேரத்தில், முழு பொறுப்பையும் மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கனமழை எச்சரிக்கை என்பது, கடந்த 12-ம் தேதியே கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், திமுகவினர் சேலத்தில் இளைஞர் அணியின் மாநில மாநாட்டை நடத்துவதில் ஒரு குழு அக்கறையோடு செயல்பட்டு வந்தனர். இண்டியா கூட்டணியின் கூட்டத்துக்குச் செல்வதில் முதல்வர் அக்கறையோடு இருந்தார். மழை வந்தபோதுகூட, திருநெல்வேலி மேயர் சேலத்தில் இருந்தார்.
உ.பி. தமிழகத்தை மூன்றாவது இடத்துக்கு தள்ளி இந்தியாவின் இரண்டாவது பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாறிவிட்டது. மத்திய அரசு வெள்ள சேதங்களை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் நிதியை விடுவிக்கும். தென்தமிழகத்துக்கு மாநில அரசு சார்பில், இதுவரை வெள்ளச் சேதம் கணக்கிடப்படாமல் உள்ளது. சென்னைக்கு மட்டும் நிதி கோரியுள்ளனர். மத்திய அரசு நிதியை விடுவிப்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது. நிதியை மத்திய அரசு முழுமையாக விடுவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.