பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ”பருவநிலை மாற்றத்தின் (Climate Change) சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்” என உறுதியளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தச் துயர சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அது ஆறாத வடுவாகவே உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு. சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, பருவநிலை மாற்றத்தின் (Climate Change) சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம். அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.