அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமரின் முன்னாள் முதன்மை செயலர் நிரிபேபந்திர மிஸ்ரா, விஹெச்பி தலைவர் ஒருவரை அழைத்து வந்தார். அவர், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா அழைப்பிதழைக் கொடுத்து விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். மதம் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனிப்பட்ட தேர்வு. ஒவ்வொருவரின் மத நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம்; பாதுகாக்கிறோம்.
இந்திய அரசியலமைப்பின்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படியும், அரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் பின்பற்றக் கூடாது. ஆனால், இந்த பிராண பிரதிஷ்டை விழாவில் என்ன நடக்கிறது? பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் போன்ற அரசியல் சாசனப் பதவிகளை வகிப்பவர்கள் நடத்தும் அரசு விழாவாக இது மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் மத நம்பிக்கையை நேரடியாக அரசியலாக்கும் செயல். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தச் சூழல் காரணமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.