வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே, இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து விட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் சுமார் 641 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மாதங்கள் நடத்திய ஆய்வில், 90 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 10 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 441 பள்ளிகளில், 39 விதமாக தீண்டாமை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இடையே தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவரை தொடாமல் இருப்பது, தலித் மாணவர்களுக்கு தண்டனை அதிகம் கொடுப்பது, மதிய உணவின் போது குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்கு தனி வரிசை, தலித் மாணவர்களை டாய்லட்களை சுத்தம் செய்ய வைப்பது, தண்ணீர் குடிக்க தனித்தனி டம்ளர்கள் என்பன உள்ளிட்ட பல தீண்டாமை கொடுமைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 சதவிகித பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆய்வறிக்கை குறித்தும் வேங்கை வயல் விவகாரத்தை வைத்தும் தமிழக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே.. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.
தமிழகத்தில், 30% பள்ளிகளில், பட்டியல் சமூக மாணவர்களுக்கு எதிராக ஜாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுகிறது என்று, நாளிதழ் செய்தி ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் முகத்திற்கு நேராகவே சிரிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசு பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக ஒதுக்கும் நிதியை எடுத்து, உங்கள் வாக்கு அரசியலுக்காக வேறு திட்டங்களுக்குச் செலவிட்டீர்கள் அல்லது செலவே செய்யாமல் திருப்பி அனுப்பினீர்கள். பொதுமக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. காலாகாலமாக நீங்கள் நடித்து வரும் மேடை நாடகங்களை நம்பியிருந்தார்கள். ஆனால், இனியும் அவர்கள் ஏமாறத் தயார் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால், குற்றவாளி களை கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கைசிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுவரை 221 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டனர். அதில் இருந்து, 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.