திரையிலும் தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த்: அமீர்!

ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை விஜயகாந்த் பெற்றுள்ளதாக அமீர் கூறியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான அமீர் விஜயகாந்த் மறைவிற்கு தன்னுடைய இரங்கலை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன் என்று விஜயகாந்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள அமீர், அநீதியை தட்டிக்கேட்கும் துணிச்சல்காரராக வாழ்ந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு உண்மையிலேயே தமிழ் திரையுலகிற்கும் இந்திய அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். திரையிலும் தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் என்றும் பாராட்டியுள்ளார்.

அவருடன் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தான் இருந்த நிலையில் அவரது திடீர் மறைவு பேரதிர்ச்சியிலும் மீளாத்துயரிலும் தன்னை ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை விஜயகாந்த் பெற்றுள்ளதாகவும் அமீர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜாதி -மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர், மண்ணின் மைந்தன் கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா இறைவனது திருவடியில் அமைதியடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.