திரையுலகிலும், அரசியல் உலகிலும் விஜயகாந்த் ஓர் சகாப்தம்: எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜயகாந்தின் மறைவு குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமாக ஆடியோ ஒன்றினை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் இன்று(டிசம்பர் 28) காலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தி விஜயகாந்தின் ரசிகர்களையும் அவர்களது கட்சியினரையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நடிகரின் விஜயின் தந்தையும் விஜயகாந்தை வைத்து 17 படங்களை இயக்கிய ஆஸ்தான இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

என் இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை, உயிரோடு இருக்கும்போது ஆரத்தழுவி முத்தமிட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆசைப்பட்டேன். அதற்காக முயற்சியும் செய்தேன். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது இந்த நிலையிலே, உயிரற்ற ஓர் உடலைப் பார்க்கக் கூடாது என கடவுள் நினைத்தாரோ இல்லையோ தெரியவில்லை. இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன். திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, ஒரு சகாப்தம் இன்று முடிந்து இருக்கிறது. அதற்காக கண்ணீர் சிந்துவதை விட வேறு ஒன்றும் வழி தெரியவில்லை. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். இவ்வாறு உருக்கமாக ஆடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.