மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமனாலும் வரலாம் என்றும் இன்று முதல் யாருக்கும் எந்த தடையும் கிடையாது எனவும் கூறினார்.
தன்னால் சாப்பிட முடியவில்லை என்றும் சப்பாட்டில் அமர்ந்தாலே விஜயகாந்தின் முகம் தான் தெரிவதாகவும் கண்ணீர் மல்க கூறிய அவர், தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை வந்ததை சுட்டிக்காட்டிய பிரேமலதா, வார்த்தைகளால் நன்றி என்று சொல்லி அதனை சிறுமைப்படுத்த விரும்பவில்லை என்றார்.
விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகளையும், கடமைகளையும் நிறைவேற்றி அவரது நினைவிடத்தில் வெற்றிக்கனியை சமர்பிப்போம் என உறுதி பூண்ட அவர், விஜயகாந்தின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார். கட்சி, சாதி, மதம், இனம், மொழி, என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட மனிதர் விஜயகாந்த் என்பது தான் அவருக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.
பிரேமலதாவுடன் அவருடைய சகோதரர் எல்.கே.சுதீஷ், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகிய இருவரும் உடனிருந்தனர். விஜயகாந்த் குடும்பத்தினர் தேமுதிக தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பிறகு கட்சி தொண்டர்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.