ஷெபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ததற்காக நாடு விலை கொடுக்க துவங்கி உள்ளது: இம்ரான் கான்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளதால் ஷெபாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இறக்குமதி செய்யப்பட்ட அரசை தேர்வு செய்ததற்காக நாடு விலை கொடுக்க துவங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். இதற்கு இம்ரான்கான் மற்றும் அவரது கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளும்கட்சிக்கு எதிராக அவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் பொருளாதார பிரச்சனை நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இம்ரான் கான், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.30 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய விலை உயர்வால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.179.85க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.174.15க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இறக்குமதி செய்யப்பட்ட அரசை தேர்வு செய்ததற்காக நாடு விலை கொடுக்க துவங்கி உள்ளது. வெளிநாட்டு முதலாளிகள் முன்பு தலைக்குனிந்து பெட்ரோல், டீசலை லிட்டருக்கு 20 சதவீதம் என ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்ட அதிகப்பட்ச விலை இதுவாகும். திறமையற்ற இந்த அரசு ரஷ்யாவுடனான 30 சதவீத மலிவு கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தை தொடரவில்லை. இதற்கு நேர்மாறாக அமெரிக்காவுடன் நட்பு நாடாக உள்ள இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் தான் லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடிந்தது. மேலும் வஞ்சகர்களின் கையில் சிக்கியுள்ள நாடு கடுமையான பணவீக்கத்தை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.