போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து அவர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை திமுக அரசால் வழங்கப்படவில்லை. இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஆயிரக்கணக்கான பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை என்பதோடு, போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் திமுக அரசால் செலவிடப்பட்டுள்ளது என்பது பெருங்கொடுமையாகும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதென்பது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத்துரோகமாகும். போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு தமிழ்நாடு அரசே தள்ளுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகவே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் மூலம் எளிய மக்களுக்கான பொது பயண சேவை பாதிக்கப்படாமலிருக்க, அவர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தையை திமுக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தங்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட அனைத்து அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள் கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.