ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தான் நிறுவிய ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதையடுத்து, கடந்த நவம்பர் 3 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், “தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன்” என அறிவித்து கவனம் பெற்றார். இந்நிலையில், ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எம்.பி., ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். அதோடு தனது கட்சியையும் காங்கிரஸுடன் இணைந்துக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்த பிறகு ஒய்.எஸ்.சர்மிளா கூறுகையில், “ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி இன்று முதல் இந்திய தேசிய காங்கிரஸின் ஓர் அங்கமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. காங்கிரஸ் நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாகும், அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.