விஜயகாந்த் போல ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்று நடிக்க வந்தேன்: அருண் விஜய்!

விஜயகாந்த் போல ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்ற கனவிலேயே நடிக்க வந்ததாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலில் தேமுதிக அலுவலகத்திலும் பின்னர் தீவுத்திடலிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல், பின்னர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். விஜயகாந்த் மறைவின்போது அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் வெளிநாடுகளில் சூட்டிங்கில் இருந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டவர்கள் தற்போது அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் போலவே தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தான் நடிக்கத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது சிகிச்சை முடிந்து வெளியில் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சினிமாவில் நடிக்க வருபவர்கள் ரஜினி, கமல் போல வரவேண்டும் என்று நினைப்பார்கள் என்றும் ஆனால் தான் விஜயகாந்த் போல ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்ற கனவிலேயே நடிக்க வந்ததாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் எப்படி சண்டை போட வேண்டும் என்றெல்லாம் முன்னதாக விஜயகாந்த் தனக்கு ஆலோசனை கொடுத்ததாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்களை தானும் செய்ய ஆசைப்படுவதாகவும் குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்ததை தானும் செய்ய விரும்புவதாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். இனி தன்னுடைய படங்களில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே சாப்பாடுதான் என்றும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தியவுடன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அருண் விஜய் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.