மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்களும் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் நினைவிடத்தில் நாள்தோறும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கும் சென்று பிரலங்கள் பலரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான சிபி ராதாகிருஷ்ணன் நேற்று விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இழப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக கூறினார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இல்லை என்பது நல்ல மனம் படைத்த அனைவருக்கும் ஆழமான வேதனை ஏற்படுத்தியுள்ளது என்றும், விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு பணியாற்றுவதை எப்போதும் கைவிடவில்லை என்றும் கூறினார். விஜயகாந்துக்கு சிலை அமைப்பது வரவேற்கத்தக்கது என்ற சிபி ராதாகிருஷ்ணன், விஜயகாந்துக்கு விருது வழங்குவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.