தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஸ்னோலினின் அம்மா வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டுமின்றி தேசியளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு 17 போலீஸார் உள்பட வருவாய் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு, இழப்பீட்டை அதிகரித்து வழங்குமாறும் பரிந்துரை செய்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானது எனவும், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் அதனை எதிர்த்து துப்பாக்கிச்சூட்டில் தனது மகள் ஸ்னோலினை பறிகொடுத்த வனிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில்,விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசு இயந்திரத்தனமாக செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னோலின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் அவரது தாயார் வனிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.