என் வரியை கொடுத்துட்டு பிச்சை கேட்கணுமா?: சீமான்!

மத்திய அரசு, அரசாங்கம் நடத்துகிறதா? அல்லது கந்து வட்டிநடத்துகிறதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக சாடியுள்ளார்.

மத்திய அரசு மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திற்கு குறைவாக நிதி வழங்குகிறது என்றும் தமிழகத்தில் இருந்து வசூலிக்கும் வரியை விடவும் குறைவான நிதியே அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட போதும் கூட தேவையான நிதி உதவியை செய்யவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் மத்திய அரசு, தமிழகத்தில் இருந்து வசூல் செய்யப்பட்ட வரியை விட அதிகமாகதான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறி வருகிறது. இதேபோல் இரு அரசுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மத்திய அரசை கந்துவட்டி நடத்துகிறார்களா என கேட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் திருச்சி வந்த பிரதமர் மோடிக்கு மழையால் பேரிழப்பை சந்தித்த தூத்துக்குடிக்குவர முடியாதா என கேட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:-

மத்திய அரசு, அரசாங்கம் நடத்துகிறதா? அல்லது கந்து வட்டி நடத்துகிறதா? என் மாநிலத்தின் வரியை மாதா மாதம் வசூல் செய்துவிட்டு பின்னர் திருப்பி தருகிறேன் என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கு வேலை இல்லையா? இதுக்கு பெயர் நிர்வாகமா? மாநில அரசின் நிதியை வைத்துதான் மத்திய அரசு நடக்கிறது.

மத்திய அரசுக்கு என்று வருவாய் எது? எல்ஐசி இருந்தது அதிலும் 60 பங்கை விற்றாகி விட்டது. மாநிலத்தின் வரியை பெற்று வைத்துக்கொண்டு பேரிடர் காலத்தில் கூட நாங்கள் பிச்சைக் கேட்க வேண்டுமா? இதுவே பீகார், குஜராத், உத்தரப்பிரதேசத்தில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருந்தால் உடளே அள்ளிக் கொடுத்திப்பார்கள். இந்தி பேசினால்தான் இந்தியன் என்றால் எங்களை ஏன் வைத்துள்ளீர்கள்? எங்களுடைய வரிக்காவும் எங்கள் மண்ணின் வளத்திற்காவும் தானே? எல்லா வளமும் சுரண்டப்பட்ட பிறகு தனி நாடு கேட்டால் கொடுத்து விடுவார்கள்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு பகுதியை முழுமையாக பார்க்கவில்லை. போட்டோக்களை பார்த்து விட்டு சென்றார். பிரதமர் மோடி திருச்சி விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார். ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திறகு சென்று பிரதமர் மோடி பார்க்கவில்லை. மக்கள் இறந்த பிறகு எதற்கு இந்த விரிவாக்கம்? மத்திய அரசை பொறுத்தவரை நாமெல்லாம் அவர்களுக்கு ஒரு ஓட்டு அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.