சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர். இந்நிலையில், கப்பலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அரபிக்கடல் பகுதியில் சோமாலியா கடற்கரை அருகே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் சென்றபோது, விரைவுப் படகில் ஆயுதங்களுடன் வந்த 6 கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறி கடத்தலில் ஈடுபட்டனர். அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கடத்தப்பட்ட லைலா நார்போல்க் என்ற கப்பலை மீட்க சென்னை ஐஎன்எஸ் போர்க்கப்பலை இந்திய கடற்படை அனுப்பியது. இந்திய கடற்படை உடனடியாக கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானமும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி, பணியாளர்களின் பாதுகாப்பை இந்திய கடற்படை உறுதி செய்த நிலையில், அரபிக்கடலில் இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் மீட்டனர். அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீட்கப்பட்ட இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. நெட்டிசன்கள் இந்திய கடற்படையின் செயலுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் இது குறித்து கூறுகையில், “கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலில் ஏறியபோது, அனைத்து பணியாளர்களும் கப்பலில் உள்ள பாதுகாப்பான அறையில் மறைந்தனர். தற்போது கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பணிநிறுத்தப்பட்ட போர்க்கப்பலில் இந்திய கடற்படையின் கமாண்டோக்கள் வணிகக் கப்பலில் ஏறி சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்” என்று கூறினார்.
அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீட்புக்காட்சிகள் தொடர்பான வீடியோக்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.