ஆதித்யா எல்-1 மிஷனை வெற்றிகரமாக முடித்து, விண்வெளி ஆராய்ச்சியில் இன்று இந்தியா மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. என்னதான் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு இதன் ஒளி அவசியமாக இருக்கிறது. சிம்பிளாக சொல்வதெனில், மனிதர்கள் காய்கறிகளையும், இறைச்சியையும் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள் செடி, மரத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. செடி, மரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் வளர்கிறது. இதற்கு சூரிய ஒளி முக்கியம். எனவே நாம் சூரியனுடன் தொடர்ந்து கனெக்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம். மரம், செடி, கொடி, ஒளிச்சேர்க்கை இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் மறைமுகமாக சூரியன் பல்வேறு வகையில் நமக்கு உதவிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை சூரியன் இல்லையெனில், நம்முடைய பூமி இந்த சூரிய குடும்பத்தை விட்டு விலகி விண்வெளியில் காணாமல் போய்விடும். இப்படி நடந்தால் உடனடியாக நமது உலகம் அழிந்துபோய்விடும். ஆக சூரியன் தனக்காக வாழ்வதை விட பூமிக்காகவே அதிகமாக வாழ்ந்து வருகிறது.
ஆனால் இப்படி சமத்து பிள்ளையாக இருக்கும் இது, பல நேரங்களில் (சூரிய) குடும்பத்தையே இரண்டாக பிளக்கும் வேலைகளை செய்துவிடுகிறது. அதாவது குறிப்பிட்ட சில நேரங்களில் சூரியன் காந்த புயல்களை வெளி கக்குகிறது. இந்த புயல் பூமியை தொட்டால் சோலி முடிஞ்ச்! இந்த காந்த புயல்கள் செல்ஃபோன் தொடங்கி, டிவி, கம்பயூட்டர் என எல்லா எலக்ட்ரிக் சாதனங்களை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க எலக்ட்ரிக் சாதனங்களைதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். இதுமட்டும் கிடையாது, இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எல்லாம் பூமியை நோக்கி ‘தொப்’ என விழுந்துவிடும். எங்கு விழுகிறது என்பதை கணிக்கவே முடியாது. ஆக இந்ந புயல்களை முன் கூட்டியே கணிக்க உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்க சூரியனுக்கு மிக நெருக்கமாக செயற்கைக்கோளை ஏவி ஆய்வு செய்து வருகிறது.
இந்த விஷயத்தில் நமது இஸ்ரோ தற்போதுதான் ‘அ, ஆ’வை போட்டு கணக்கை தொடங்கியிருக்கிறது. அதாவது சூரியனை ஆய்வு செய்ய நாம் முதன் முதலில் கடந்த ஆண்டுதான் ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை அனுப்பியிருக்கிறோம். இது சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுகளை செய்யும். ஆதித்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு நிலை நிறுத்தப்படும். இதற்கான 127 நாட்கள் பயணத்தை இன்றுடன் ஆதித்யா எல்-1 நிறைவு செய்திருக்கிறது. அதாவது இன்று மாலை 4 மணியளவில் இந்த எல்-1 பாதையில் நுழைந்திருக்கிறது. ரூ500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு இந்த விண்கலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியன் குறித்த தகவல்களை நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கும்.
இந்நிலையில் இந்த வரலாற்று வெற்றிக்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். “இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நமது முதல் சூரிய ஆய்வு மையமான ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்திருக்கிறது. மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில், நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து அடைவோம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.