நடைபயணம் என்ற போர்வையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உல்லாச பயணம் மேற்கொண்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்று பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பாஜக அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசின் மொத்த கடன் 31 மார்ச் 2023 நிலவரப்படி ரூபாய் 153 லட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 31 மார்ச் 2024 இல் 169 லட்சம் கோடி ரூபாயாக 2023-24 நிதியாண்டில் உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது. இன்றைய கடனை ஆய்வு செய்கிற போது, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி விலகுகிற போது, 31 மார்ச் 2014 அன்று இருந்த மொத்த கடன் ரூபாய் 58.6 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 52.2 சதவிகிதமாகும். ஆனால், இது 9 ஆண்டுகளில் 2023 இல் 174 சதவிகிதமாக அதிகரித்து ரூபாய் 155.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தின் காரணமாகவே இத்தகைய கடன் சுமை ஏற்பட்டிருப்பதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் அற்ப விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. மக்கள் மன்றத்தில் அவர் பதில் கூறியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.