நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி கலைஞர்: கமல்ஹாசன்

நவீன தமிழ் சினிமாவின் வசன சிற்பி கலைஞர் என்று கமல்ஹாசன் பேசினார்.

சென்னை கிண்டியில் ‘கலைஞர் 100 விழா’ சென்னை கிண்டியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகரும், ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

மேடையின் ஓரமாக நின்று பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரம் தான். கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவினை வசனம் வசப்படுத்தியவர் என்றால் அது கலைஞர் தான். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர். ஒருவர் கருணாநிதி, ஒருவர் சிவாஜி, ஒருவர் எம்ஜிஆர். சிறுவயதில் நான் கலைஞரை போல ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்று என் அக்காவிடம் கூறுவேன்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று கருணாநிதியிடம் கற்றுக்கொண்டதால் தான் இன்று பிக்பாஸ் மூலம் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த அரசியல் மாண்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்பு எங்கிருந்து கற்றுகொண்டது என்று எனக்கு தெரியும். கலைஞர் கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.