தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம். தமிழ்நாடு முழுவதும் ரூ.35 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. “ஏஐ, புதுப்பித்தல் எனர்ஜி துறைகளில் தமிழ்நாடு முன்னிலை” வகித்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.