திராவிட கும்பலின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது தமிழ் கூட்டம்: சாட்டை துரைமுருகன்!

திரையுலகம் சார்பாக நேற்று நடைபெற்ற கலைஞர் 100 விழா தோல்வியில் முடிந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசியலில் மட்டுமின்றி திரையுலகிலும் கோலொச்சியவர். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கருணாநிதி. ராஜகுமாரி, மந்திரிகுமாரி, அபிமன்யு, மனோகரா, பராசக்தி, பணம், இருவர் உள்ளம்இ அரசிளங்குமரி, பூம்புகார் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கருணாநிதியின் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பாக கலைஞர் 100 விழா நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த கலைஞர் 100 விழா நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏராளமான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபலங்கள் பேட்டரி கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இருப்பினும் இந்த கலைஞர் 100 நிகழ்ச்சியில் விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. இதேபோல் பல நடிகர் நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பொதுமக்களும் எதிர்பார்த்த அளவுக்கு பங்கேற்கவில்லை என தெரிகிறது. இதனால் விழா நடைபெற்ற இடத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் முதல் இரண்டு மூன்று வரிசைகள் மட்டுமே நிரம்பியிருந்தன. நூற்றுக்கணக்கான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. மேலும் மக்கள் திமுகவை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் சிலர் கருத்துக்கடிளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

திரையுலகம் சார்பாக இன்று(நேற்று) நடத்தப்பட்ட கலைஞர் 100 விழா தோல்வியில் முடிந்திருக்கிறது! காலி இருக்கைகள் ஒரு பக்கம், விஜய், அஜித் மட்டுமல்லாது முக்கியமான பல முன்னணி நடிகர், நடிகைகள் விழாவை புறக்கணித்துள்ளனர். தமிழ் சினிமாவின் தந்தை என போற்றப்படும் நடராஜ முதலியாருக்கு வழங்கபடாத மரியாதை, தமிழ் திரையுலகில் அளப்பெரிய சாதனைகளை செய்த பல்வேறு திரை ஆளுமைகளுக்கு செய்யப்படாத மரியாதை கருணாநிதிக்கு மட்டும் எதற்கு என்பதே பலரின் கேள்வி! பொய்யை நிறுவப் பார்த்த திராவிட கும்பலின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது தமிழ் கூட்டம்!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.