பட்டுக்கோட்டையில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் ஐஸ்வர்யா(19). இவர் பூவாளூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் நவீனை (19) காதலித்து வந்துள்ளார். நவீன் டிப்ளேமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ளார். ஐஸ்வர்யா, நவீன் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், பட்டியலின இனத்தைச் சேர்ந்த நவீன், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்வர்யா இருவரும் கடந்த டிச.31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு, வீரப்பாண்டி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்துகொண்ட விடியோ வாட்ஸ் ஆப்பில் பரவியது. இதையடுத்து, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல் துறையினர், ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல் துறையினரிடம் நவீன் கேட்ட போது, ஐஸ்வர்யாவின் தந்தை அவர் காணவில்லை என புகார் அளித்த நிலையில், அவரை அழைத்துக்கொண்டு ஊருக்கு செல்லுகிறார்கள், நீ அவர்கள் கண்ணில் பட்டால் அடித்து விடுவார்கள் என்று தெரிவித்து காவல் துறையினர் நவீனை அனுப்பியுள்ளனர்.
பின்னர், கடந்த 3 ஆம் தேதி ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் துன்புறுத்தி கொலை செய்து, எரித்து விட்டதாக நவீனுக்கு அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நவீன் வாட்டாடத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்று திங்கள்கிழமை நெய்வவிடுதி, பூவாளூர் கிராமத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள ஐஸ்வர்யாவின் தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.