தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்!

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் அரசின் அதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. நீண்ட கால, நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் அரசு நிர்வாகம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என சொல்வதற்கு என்ன தகுதியிருக்கிறது என போக்குவரத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆறு அம்ச கோரிக்கைகளில் ஒன்றை கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, திட்டமிட்டபடி நாளை(இன்று) முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தற்போதிலிருந்தே பன்மடங்கு கட்டணத்தை உயர்த்த தொடங்கிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை பொதுமக்கள் நலன்கருதி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.