அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12ம் தேதி தீர்ப்பு!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3வது முறையாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கிலிருந்த உண்மை தொகைகளைத் திருத்தி பொய்யாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி வாதிட்டார். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வங்கி பணப் பரிவர்த்தனைகளையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகவும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விவசாயம் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத்துறை கணக்கில் கொள்ளவில்லை எனவும், ஆவணத்தில் உள்ள தேதிகளை விசாரணைக்கு ஏற்ற வகையில் அமலாக்கத்துறை மாற்றி உள்ளதாகக் குற்றம் சாட்டினார். எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன் ஆஜராகி, கடந்த 2016 முதல் 2017ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென்- டிரைவில், வேலை வாய்ப்பு தொடர்பாக யார், யாரிடம் இருந்து எவ்வளவும் தொகை பெறப்பட்டது, அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், வங்கி ஆவணங்களைத் திருத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார். மனுதாரர் சட்ட விரோதமாகப் பணம் பெற்றார் என்பதற்கான முகாந்திரம் உள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு பெற்றதாகவும், சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதால், மேற்கொண்டு விசாரணை நடத்தத் தேவையில்லை என்றார்.

இலாக்கா இல்லாத அமைச்சராக இன்னும் தொடர்வதால், சமூகத்தில் அதிகாரமிக்க நபராகத் தொடர்வதாகத் தெரிவித்தார். கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை 50க்கும் மேற்பட்டோர் தாக்கியதாகவும், உடனே அவர்களுக்கு கீழமை நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றதாகவும், செந்தில் பாலாஜியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஜாமீன் பெற்றதாகத் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவித்தார். எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் ஜனவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அல்லி தெரிவித்தார்.