பில்கிஸ் பானு வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்த சாட்டை அடி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உச்சநீதிமன்றம் நேற்று (8.1.2024) அளித்த இரண்டு முக்கிய தீர்ப்புகள் என்பது அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை சரியாக அமலாக்கும் வரலாற்றுச் சிறப்புமிகுந்தவை ஆகும்! பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்பது காவி பா.ஜ.க. ஆட்சிக்குக் கிடைத்த சாட்டையடியாகும். இரண்டாவது EWS என்று கூறப்படும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற அசல் அநியாயமான ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தையே அடியோடு தகர்ப்பதாகும்.
நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளை சரிவர பயன்படுத்த வாய்ப்பளிக்காமல், ஒரே வாரத்தில் இரண்டு திருத்தங்கள், முதலில் அவசரக் கோல அபத்தம் – இரண்டாவது அந்தத் திருத்தத்திற்கு மற்றொரு திருத்தம் என்று முறையே 103வது அரசமைப்புச் சட்டத் திருத்தம், 105வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ற பெயரால், திணிக்கப்பட்டதே இந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. மற்ற இட ஒதுக்கீடுகளுக்கு Quantifiable Data உள்ளதா? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த 10 சதவிகித (EWS) இட ஒதுக்கீட்டின் தேவைக்கு அந்தப்படி எந்தப் புள்ளிவிவரமும் இல்லாதபோதும், அதற்கு மட்டும் அதாவது உயர்ஜாதிக்கு இட ஒதுக்கீட்டில் மட்டும் அதை கேட்கவே இல்லை. அப்படியும் 5 நீதிபதிகளில் 3 பேர் ஒரு நிலைப்பாடு, 2 பேர் மாறுபட்ட நிலைப்பாடு என்று எழுதியும் அதிலும் உயிர் கொடுக்கப்பட்டது.
தொடக்கத்திலிருந்தே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது; அது அரசமைப்புச் சட்டத்திற்கும், அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் வரைவுக் குழு முடிவுக்கும், கருத்துக்கும் எதிரானது என்பதை நாம் விளக்கி, எம்.ஜி.ஆர். அரசின் 9 ஆயிரம் ரூபாய் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டதை – மக்கள் போராட்டக் களத்திலும், தேர்தல் களத்திலும் தோற்கடித்து, அவரையே பின்வாங்க வைத்த வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு.
எனவே, தமிழ்நாடு அரசு ‘திராவிட மாடல்’ அரசு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் அரசு, அதை செயல்படுத்தாத நிலையில், அதனை செயல்படுத்த உத்தரவிடக் கோரி – பார்ப்பன சங்கத்தினர் பின்னணியில் ஒரு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு – நேற்று (8.1.2024) தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது! மாநில அரசின் உரிமையில் குறுக்கிட முடியாது; மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெளிவாகக் கூறி, தள்ளுபடி செய்துவிட்டது!
இட ஒதுக்கீடு என்பது மக்களை நேரடியாக ஆளும் ஆட்சி, மாநில அரசுகளின் ஆட்சிக்குத்தான் உண்டு. எனவேதான், மாநில அரசு பட்டியலில் தனித்தனியே ஆங்காங்குள்ள நிலைமைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது! உதாரணம், தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு – அதுவும் 9 ஆம் அட்டவணை பாதுகாப்புடன் கூடிய நிலையில்! பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நீக்கப்பட மாநில அரசுகள் ஒன்றுபடவேண்டும்!
முன்பே கலைஞர் அரசு மற்றும் தொடர் அரசு அ.தி.மு.க.வாக இருந்தாலும் – ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டதே கிடையாது. எனவே, தமிழ்நாட்டின் இந்த முன்னுதாரணத்தை சமூகநீதி பற்றி பேசும் அனைத்துக் கட்சிகளும், மாநிலங்களும் தமிழ்நாடு தி.மு.க. அரசினைப்போல, நாள் ஒன்றுக்கு 2,222 ரூபாய் சம்பாதிக்கும், வருமான வரி கட்டும் உயர்ஜாதியில் ஏழைகள் என்று முத்திரை குத்தி, தனிச்சலுகையாக 10 சதவிகிதம் கொடுப்பதை உடனடியாக ரத்து செய்ய மாநில அரசுகள் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசினைப் பின்பற்றி, சமூகநீதிக்கு உரிய பாதுகாப்புத் தேடுவது அவசரம், அவசியம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.