பூட்டான் புதிய பிரதமர் ஷெரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பூட்டான் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்திய ஆதரவு’ நிலைப்பாடு கொண்ட ஷெரிங் டாப்கேவின் மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பூட்டான் புதிய பிரதமர் ஷெரிங் டாப்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா இடையே உள்ள நாடு பூட்டான். இந்தியாவுக்கு பூட்டான் மிக முக்கியமான எல்லை நாடு. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கக் கூடிய இடமாக பூட்டானின் டோக்லாம் பீடபூமி உள்ளது. இதனால் இந்த பகுதியை கோழி கழுத்து (Chicken Neck) என பாதுகாப்பு துறை வல்லுநர்கள் குறிப்பிடுவர். பூட்டானில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நடவடிக்கை நிகழ்ந்தாலே வடகிழக்கு மாநிலங்களுக்கு பேராபத்து. இதனால்தான் டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்த போது நமது ராணுவ வீரர்கள் பூட்டானுக்காக உக்கிரமாக சீனாவுடன் மோதும் நிலைமை உருவானது. பூட்டானின் எல்லை பாதுகாப்பு பொறுப்பை இந்தியா தன் வசம் வைத்துள்ளது.

பூட்டானையும் தம் வசப்படுத்த சீனா இடைவிடாமல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பூட்டானுக்குள்ளும் சீனா ஆதரவு சக்திகளை உயிர்ப்பித்தும் வருகிறது. இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகளை சீனா தம் வசமாக்கி வருகிறது. அண்மையில் மாலத்தீவின் புதிய அதிபராக முய்சு பதவியேற்றதும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றினார். சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்தப் பின்னணியில் பூட்டானில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பூட்டான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷெரிங் டாப்கேவின் மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. ஷெரிங் டாப்கே, இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. இம்முடிவுகளால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனிடையே பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பர் மேதகு ஷெரிங் டோப்கேவுக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது தனித்துவமான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.