காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம்: ஜே.பி.நட்டா

எதிர்க்கட்சியாக இருக்கக்கூட காங்கிரஸ் தகுதியற்றது. காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

கவுகாத்தியில் அசாம் மாநில பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அரசாங்கத்தை நடத்துவதற்குத்தான் காங்கிரஸ் திறமையற்றதாக இருந்தது. மாலத்தீவு சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்த கருத்தை பார்த்தால், அக்கட்சி எதிக்கட்சியாக இருக்கக்கூட தகுதியற்றது. கருப்பு பணத்தையும், தத்தமது கட்சி தலைவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளனர். அதில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குகள் உள்ளன. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தியாவுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம். அந்த அளவுக்கு அநீதிகளை இழைத்துள்ளது. இந்தியாவை பிளவுபடுத்த அனைத்து காரியங்களையும் செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.