கடவுள் ராமர் மது, மாமிசம் உண்டவன் தான்: கார்த்தி சிதம்பரம்!

கடவுள் ராமர் மது, மாமிசம் உண்டவன் தான். ராமர் அசைவ உணவின் தீவிர பிரியர். வனத்தில் காட்டு பன்றி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாடி ராமன் உண்டான் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் கடவுள் ராமன் மது மற்றும் மாமிசத்தை சாப்பிட்டவர் தான் எனக்கூறியுள்ளார். வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அவர் இப்படி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உணவு விஷயத்தில் கொந்தளித்துபோன் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பனம் என அவர் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் பல இடங்களில் ராமன் தீவிரமான அசைவப்பிரியர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே. ராமன் வனவாசம் போக வேண்டும் என்ற நிலை வந்தபோது மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான், ‛அம்மா’ நான் இராஜாங்கத்தையும், பரிபாலனத்தையும் இழக்க வேண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும் – அயோத்தியா காண்டம் 20, 26, 94 ஆகிய அத்தியாயங்கள். ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததால் இருந்துள்ளது. வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது. சகோதரர்கள் (ராமன், லட்சுமணன்) இரவு பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (இராமனுக்கு அப்போது வயது 17 தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது. காட்டில் இருக்கும் நிலை தூண்ட, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர். ஒரு காட்டுபன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு ஆகியவற்றை கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்து சமைத்து ஒரு மரத்தடியை தம் வீடாக்கி தின்றனர் – அயோத்தியா காண்டம், சர்க்கம் 52, சுலோகர் (102).

சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்று கரைகளில் உலவி வந்த சீதையை திருப்திப்படுத்த மாமிச உணவை கொடுத்து ராமன் கூறினான், ‛‛இது ஊட்டமிக்க உணவு, ருசியான திருப்பத்தை தரக்கூடியது – அயோத்யா காண்டம், சர்க்கம் 96, சுலோகர் 1… மேலும் ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி ‛கி’ போன்ற மாமிசம் மிக்க நீர்ப்பறவைகளும், மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை. கம்பராமயணப்பாடல் ஒன்றானது. இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த அருந்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினெள் கொணர்ந்தேன், என்கொல் திருஉளம்? என்ன வீரன் விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: வேடன் குகன் ராமனுக்கு தேனும் மீனும் உணவாகக் கொடுத்ததை விளக்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

பொதுவாக ராமன் சைவ பிரியர் என இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் கார்த்தி சிதம்பரம் இப்படி தெரிவித்துள்ளார். தற்போது வரை கார்த்தி சிதம்பரத்தின் பதிவுக்கு பாஜக பதிலளிக்கவில்லை. இருப்பினும் விரைவில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பதிலளிக்கலாம். அப்படி நடந்தால் இது பெரிய விவாதமாக மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே ராமர் கோவில் கும்பாபிேஷகத்தில் பங்கேற்க வழங்கப்பட்ட அழைப்பை காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் நிராகரித்துள்ளனர். ராமர் கோவில் விழாவில் பங்கேற்க மாட்டோம் என அவர்கள் சார்பில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில் அதனை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் கார்த்தி சிதம்பரத்தின் இந்த பதிவும் விவாதத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.