தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை: ஓ.பன்னீர்செல்வம்!

தேனியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தனிக்கட்சி தொடங்க எண்ணமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுராபுரியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

தினந்தோறும்.. வாரந்தோறும்.. மாதந்தோறும் தீர்ப்புகள் வந்தாலும்.. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும், “நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள் எங்களுக்காக நீங்கள் அந்த இலக்கை நோக்கி வீரநடைபோட்டு கொண்டிருக்கிறீர்கள்.. எங்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு தான் என்று தொண்டர்கள் இன்றைக்கு முழு ஆதரவு தந்து.. நாங்கள் செல்லும் இடத்திற்கு எல்லாம் எங்களை வரவேற்று.. நீங்கள் எடுத்திருக்கிற கொள்கை, நீங்கள் செல்கின்ற பாதை இவைகள் எல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா நடந்து சென்ற பாதை என்ற அடிப்படையில், மிகப்பெரிய ஆதரவை அளித்து வரும் மக்களுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதை மனமார தெரிவித்துக்கொள்கிறேன்.

தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. யாராலும் வெல்ல முடியாத வகையில் 3 முறை எம்ஜிஆர் ஆட்சியமைத்து முதல்வராக இருந்தார். அதிமுக தொண்டர்களா? ரொம்ம நல்லவங்கப்பா என்று மற்றவர்கள் பாராட்டுகிற வகையில் இயக்கத்தை இரு தலைவர்களும் வழி நடத்தினார்கள். ஒரே ஒரு சட்டவிதியை மட்டும் எம்ஜிஆர் மாற்றம் செய்யக்கூடாது.. திருத்தம் செய்யக்கூடாது என்று தெரிவித்து இந்த சட்டவிதியை உருவாக்கியிருந்தார். தொண்டர்கள் தான், கழகத்தின் உச்சப்பட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவி. இந்த பதவியை தேந்தெடுக்கின்ற பொறுப்பு.. உரிமை தொண்டர்களுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியிருந்தார்.அதுவும் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தொண்டனும் ஓட்டு போட்டு பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். இது தொண்டர்களுக்கு எம்ஜிஆர் தந்த உரிமை. இந்த உரிமை தற்போது பறிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுகவில் 12 ஆண்டுகள் பொருளாளர் பதவியை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருந்தார். நான் தான் பொருளாளர். நான் தான் அறிக்கையை வாசிக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது. எனக்கு அந்த வாய்ப்பை கூட வழங்கவில்லை. அதற்குள் பொதுக்குழுவில்ல் நன்றி உரை வாசிக்க தொடங்கிவிட்டனர். அதற்கு பின் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.

இப்போது நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். தனிக்கட்சி தொடங்க மாட்டோம் என்று அறிவித்து விட்டோம். தனிக்கட்சி என்று ஆரம்பித்தால் நாம் போட்டுள்ள வழக்கு வேறுவிதமாக போய்விடும். அதற்கு நமக்கு துளிகூட எண்ணமில்லை. அ.தி.மு.க.வை கபட வேடதாரி குழுவில் இருந்து மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்பதே நமது இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.