நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறி யிருப்பதாவது: –
தமிழகத்தில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டு புத்தக காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘சிஐபிஎப் 2024’ இன்று (16-ம் தேதி) தொடங்கி ஜன.18 வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன. பல்வேறு கருத்தரங்கங்கள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டு பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச்செல்வத்தை தமிழில் ஆக்கி அளிக்கவும், பெரும் பொருட் செலவில் நமது அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத் திருவிழாவில் அனைவரும் பங்கேற் றுப் பயன்பெறுங்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.