“அயோத்தியில் கோயில் கட்டுவதில் எங்களுக்கு பிரச்னை கிடையாது. ஆனால் அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில்தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது” என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக இளைஞர் அணி நடத்தி வருகிறது. அந்த வகையில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை இளைஞர் அணிசெயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20.01.2024 அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடையும் என திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், நீட் விலக்கிற்காக 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்ற திட்டமிட்ட நிலையில், தற்போது வரை 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளோம். நானும், இளைஞரணி தம்பிமார்களும் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளோம் என தெரிவித்தார்.
ராமர் கோயில் திறப்புக்கு பங்கேற்பது அவரவர் விரும்பம் என அதிமுக தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, அது அவர்கள் விருப்பம்; அவர்கள் கரசேவைக்கு ஆட்களை அனுப்பினார்கள். நாங்கள் எந்த மதத்திற்கோ, நம்பிக்கைகளுக்கே எதிரானவர்கள் கிடையாது. அயோத்தியில் கோயில் கட்டுவதில் எங்களுக்கு பிரச்னை கிடையாது. ஆனால் அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில்தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றார்.
கால் வலி காரணமாக அயோத்தி ராமர் கோயிலில் பங்கேற்க போவதில்லை என ஈபிஎஸ் சொல்லி உள்ளது குறித்த கேள்விக்கு, அவர் தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் ஈபிஎஸ்க்கு அடிக்கடி கால்வலி ஏற்படுகிறது என பதில் அளித்தார்.