சாதி, மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது: ராகுல் காந்தி!

சாதி, நம்பிக்கை, மதத்தின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அருணாச்சலப் பிரதேசத்தின் தொய்முக் பகுதியில் தனது ஆதரவாளர்களோடு கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதம், சாதி, நம்பிக்கை ஆகியவற்றின் பெயரால் பாஜக மக்களை பிரிக்கிறது. மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் மக்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள அது தூண்டுகிறது. சில தொழிலதிபர்களின் நலன்களுக்காக மட்டுமே பாஜக செயல்படுகிறது. சிரமப்படும் மக்களின் நலன் குறித்து அக்கட்சிக்கு கவலை இல்லை. அதேநேரத்தில், நாட்டு மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது.

கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் நான் தொடங்கிய இந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை 6,713 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. வடகிழக்கு பிராந்திய மக்களின் துயரங்களை வெளிக்கொணர்வதே இந்த யாத்திரையின் நோக்கம். அருணாச்சலப் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கொடுத்தது காங்கிரஸ். ஏழைகள் படும் துயரங்களை வெளிப்படுத்தவும், இளைஞர்கள், பெண்கள், வலிமையற்றவர்களின் நலன்களைக் காக்கவும் பாடுபடக்கூடிய கட்சி காங்கிரஸ். ஆனால், மக்கள் படும் துயரங்களைப் போக்க பாஜக அரசு தயாராக இல்லை. அவை குறித்து பேச ஊடகங்களும் தயாராக இல்லை. காலை முதல் மாலை வரை நான் பயணிக்கிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தங்கள் துயரங்கள் குறித்து தெரிவிப்பதைக் கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.