கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாங்க: சகாயம் ஐ.ஏ.எஸ்.

திமுக அரசு மாநில சுயாட்சியில் உறுதியாக இருந்தால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியதாவது:-

நான் 2013 ஆம் ஆண்டு கோ ஆப் டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்தேன். அப்போது டிசம்பரில் எளிய நெசவாளர்களுடைய வாழ்வை மேம்படுத்தவும், தமிழர்களுடைய அழகிய ஆடை மரபாக இருக்கக்கூடிய வேட்டி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முறையாக நாங்கள் கோ ஆப் டெக்சில் முடிவெடுத்தோம். 2014 ஜனவரியில் பொங்கலுக்கு முன்பாக ஏதாவது ஒருநாளில் வேட்டி தினம் கொண்டாட வேண்டும் என நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கடிதம் எழுதினேன். 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேட்டி தினம் கொண்டாடினார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதேபோல் நான் கடிதம் எழுதினேன். அவர்களும் அணிந்து வந்தார்கள்.

தேசிய கல்விக்கொள்கை, தமிழக கல்விக்கொள்கை பற்றியெல்லாம் ஆய்ந்திட நான் விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். 1970 களுடைய மத்தியில் அன்று நெருக்கடி நிலையின் காலக்கட்டத்தில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. என்னை பொறுத்தவரை கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றை திமுக அரசு உண்மையிலேயே மாநில சுயாட்சியில் உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் இந்த கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டுவர வெகு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொள்ள வேண்டும். எனவே தேசிய கல்விக்கொள்கை என்ற கேள்விக்கே இடமில்லை. இது ஒரு துணைக்கண்டம். அது பல்வேறு வரலாறு, கலாச்சார, பண்பாடு, மொழி, இனம் பின்புலத்தை கொண்ட தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒரு தேசத்தில் கல்வியை பொறுத்தவரை அந்தந்த தேசிய இனங்கள் நிரம்பி வாழக்கூடிய மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.