சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு வருவதால் இந்திய கடற்படை உஷார்!

மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு செல்ல இருக்கிறது. இதன் காரணமாக இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.

புவிசார் அரசியலில் மாலத்தீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா இங்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் அங்கு அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர் முய்ஜு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்துதான் இந்தியாவுக்கு எதிரான குரல்கள் மாலத்தீவில் அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் சர்வதேச அரசியல் இருக்கிறது. அதாவது, தற்போது சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. எனவே சீனாவுடன் கைகோர்த்தால் தாங்களும் வளரலாம் என சில நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன. மறுபுறம் அமெரிக்காவின் செல்வாக்கு வேகமாக சரிந்து வருகிறது. எனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்த்திருக்கிறது. இப்படியாக உலக நாடுகளை அமெரிக்கா ஆதரவு, சீன ஆதரவு என இரண்டாக பிரித்திருக்கிறது. இதேதான் தற்போது மாலத்தீவிலும் எதிரொலித்திருக்கிறது.

மாலத்தீவை தொடர்ந்து இந்தியா வசம் வைத்திருந்தால் இந்திய பெருங்கடலில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டி இருக்க முடியும். ஆனால், இப்போது அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு இது இரண்டாவது சரிவு. ஏற்கெனவே இலங்கை சீனாவுடன் கைகோர்த்து இருப்பதால் சீனாவின் ஆதிக்கம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இப்போது மலாத்தீவும் சேர்ந்திருப்பதால் சீனாவின் பலம் அதிகரித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த பேச்சுகளுக்கு மத்தியில் இந்தியாவின் படைகள் மாலத்தீவிலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று அதிபர் முய்ஜு உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இந்தியா, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதோடு நின்றுவிடாமல் சீனாவுக்கு சென்று அங்குள்ள தொழில் வளர்ச்சியை பார்வையிட்டு, அதே பாணியில் மாலத்தீவிலும் வளர்ச்சியை ஏற்படுத்த முய்ஜு முயன்றுள்ளார்.

இந்த கூட்டணியின் தொடர்ச்சியாக தற்போது சீன உளவு கப்பல் ஒன்று மாலத்தீவுக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்று அடிக்கடி கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான், சியாங் யாங் ஹாங், யுவான் வாங்க் 5 ஆகிய உளவு கப்பல்கள் ஆய்வு என்கிற போர்வையில் வருகை தந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் 2 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தங்களுடைய கப்பல்களை ஆய்வு கப்பல் என்று சீனா கூறிக்கொண்டாலும், அது உளவு பார்க்கவே அனுப்பப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிலை நிறுத்தப்பட்ட இந்த கப்பல்களால் அசால்ட்டாக 750 கி.மீ தூரம் வரை உளவு பார்க்க முடியும். இலங்கையிலிருந்து 750 கி.மீ தொலைவு எனில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்கள், தமிழ்நாட்டின் துறைமுகங்கள் ஆகியவை இதற்குள் அடங்கிவிடும். எனவே இது குறித்த தகவல்கள் சீனா ரகசியமாக சேகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டது. தற்போது இதே கப்பல்தான் அடுத்த வாரம் மாலதீவுக்கும் வருகிறது. எனவே இந்திய கடற்படை முழு உஷார் படுத்தப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.