மணிப்பூரில் 6 வீரர்களை சுட்டுவிட்டு அசாம் ரைபிள் வீரர் தற்கொலை!

மணிப்பூரில் அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர் ஒருவர், தனது சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே மணிப்பூர் அமைதி முழுமையாக திரும்பாத நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. ஏராளமான உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் இதனால் ஏற்பட்டிருக்கிறது. ராணுவம், துணை ராணுவ படைகள் அங்கு குவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பதற்றம் முழுமையாக தணியவில்லை. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. அதாவது, பாதுகாப்பு படையில் இருந்த அசாம் ரைபிள் படைவீரர், தன்னுடன் பணியில் இருந்த மற்ற வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

சுராசந்த்பூரில் சேர்ந்த வீரர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர் நீண்ட விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பியிருக்கிறார். இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகே தெற்கு மணிப்பூரில் அவருக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று காலை பணியில் சேர்ந்த அவர் தனது துப்பாக்கியை கொண்டு உடன் பணியாற்றிய 6 பேரை சுட்டிருக்கிறார். பின்னர் தன்னை தானே சுட்டுகொண்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அசாம் ரைபிள்ஸ் (தெற்கு) ஐஜி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தற்போது மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பான வதந்திகளையும், ஊகங்களை தவிர்க்கவும் உண்மை தகவல்களை பகிர்ந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. எனவேதான் நாங்கள் இது குறித்து அனைத்து தகவல்களையும் பகிர்ந்திருக்கிறோம். தாக்குதலுக்கு உள்ளான 6 வீரர்களில் யாரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் கிடையாது” என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.