கோயிலைக் கட்டினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால், எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற நாடளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 2.02 கோடியில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதிகளில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக மாநில இளைஞரணி மாநாடு நடக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால், 1.50 லட்சம் பேர் தான் கலந்து கொண்ட கூறப்பட்ட நிலையில் நாற்காலிகள் காலியாக இருந்தன. தமிழக வரலாற்றில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டது அதிமுக மாநாட்டில்தான். திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஒரு தீர்மானம் கூட மக்களுக்கு பயன் அளிக்க கூடிய தீர்மானமாக இல்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி வருகின்றனர்.
நாடளுமன்ற கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அதிமுக சரியான முறையில் கூட்டணி அமைக்கும். நாடளுமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக தலைமை அறிவிக்கப்பட்ட குழுவினர் நாளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்குகிறது. மக்களுக்கு நன்மை, உரிமை கிடைக்க கூடியதாக இந்த அறிக்கை இருக்கும். ஒவ்வொரு கட்சிகளின் கொள்கை, கருத்துகள் வேறு. இண்டியா கூட்டணில் இருந்த கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம். மேற்கு வங்கம், பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியே செல்வதாக கூறி இருக்கிறார்கள், பொறுத்து இருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் எதிர்காலம் எப்படி இருக்கிறது என திமுக இளைஞர் அணி மாநாட்டில் தெரிந்திருக்கிறது. ஆங்காங்கே மது அருந்துவது, சீட் ஆடுவது உள்ளிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஜெர்மன் நாட்டில் இருந்து பேருந்து வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில்தான், தற்போது பேருந்து வாங்கப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களை ஏமாற்றும் அரசு தான் திமுக.
ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் விருப்பப்பட்ட கோயிலை கட்டுகிறார்கள். கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள். கோயிலை கட்டினால் ஆதரவு அளிப்பார்கள் என்றால், எடப்பாடியில் அதிமுக போட்டியின்றி வெற்றி பெறும். அதிமுக ஆட்சியில் தான் அதிக குடமுழுக்கு, அன்னதானம், தேவலாயங்கள், மசூதிக்கு சிறப்பு நிதி கொடுத்தோம். அதிமுக மதத்துக்கும், சாதிக்கும் அப்பாற்ற கட்சி. ஒரு கோயிலை கட்டினால் அவர் பக்கமே போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து.
திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் பணிக்கு சேர்ந்த மாணவி, பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தும், வழக்கு பதிவு மட்டுமே செய்த நிலையில், கைது செய்யவில்லை. அதிமுக சார்பில் வரும் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையிம் அவசரகதியில் திறக்கப்பட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.