அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கை தமிழக அரசும், அமலாக்கத் துறையும் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோருவது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ்பாபு மீதான அமலாக்கத் துறை வழக்கை முடித்து வைக்க அமலாக்கத் துறை அதிகாரியான அங்கித் திவாரி ரூ.3 கோடி பேரம் பேசி ரூ.20 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றபோது கடந்த டிச.1-ம் தேதி அவரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரியை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும் அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தமிழக அமைச்சர்கள் பலர் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அவர்கள் தொடர்பான விசாரணை கோப்புகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று விட்டனர்” என குற்றம்சாட்டினார்.

அதையடுத்து நீதிபதிகள், “லஞ்ச ஒழிப்புத்துறை வசம் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை தமிழக அரசு அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபில், “இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு அமலாக்கத் துறை தவறான தகவல்களைத் தருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஏஜென்சிகள் மூலமாக அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கைகள் தமிழகம் போன்ற மாநிலங்களில் குறிவைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை” என வாதிட்டனர். அப்போது அமலாக்கத் துறை தரப்பில், “எங்களுக்கும் தவறு செய்த அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு, அமலாக்கத் துறை என நீங்கள் இருவருமே அங்கித் திவாரி மீதான லஞ்ச வழக்கு விசாரணையை அடுத்த விசாரணை வரை தொடர வேண்டாம் என இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோருவது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அத்துடன், “இது ஆரம்பம்தான். அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இந்த நாட்டின் கதி என்ன ஆவது? கூட்டாட்சி தத்துவத்தின் கட்டமைப்பில் இதுபோன்ற வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்காத வண்ணம், அதேநேரம் பழிவாங்கும் நோக்கம் இல்லை என்பதை உறுதிசெய்யும் வண்ணம் வெளிப்படைத் தன்மையுடன் விரிவான விசாரணை நடத்துவதற்கு சுமுகமான சிறந்த நடைமுறைகளை இருதரப்பும் பரிந்துரைக்க வேண்டும். வழக்கு தொடர்பான உரிய ஆவணங்களை இருதரப்பும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்படும் எஃப்ஐஆர்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்றனர்.

அத்துடன், “இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ள இருதரப்பும் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீதிமன்றமே தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்த நீதிபதிகள், காழ்ப்புணர்ச்சியுடன் யாரையும் கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.