மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமதா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலத்திலேயே யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ராகுல் காந்தியை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் உருவானது. இதனையடுத்து காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது; மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என மமதா பானர்ஜி அறிவித்தார். அதே நேரத்தில் “இந்தியா” கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும் ராகுல் காந்தியின் யாத்திரை தொடர்பாக தங்களுக்கு எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆகையால் ராகுல் காந்தியின் யாத்திரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இணைந்து பங்கேற்காது எனவும் மமதா பானர்ஜி கூறினார்.
இப்பின்னணியில் வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் கூச் பிகாரை நேற்று வந்தடைந்தது ராகுல் யாத்திரை. இன்று சிலிகுரியில் ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. ஆனால் ராகுல் காந்தி யாத்திரைக்கு மேற்கு வங்க மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினரையும் ராகுல் காந்தியையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். முன்னதாக பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. ராகுல் காந்தி மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. ராகுல் காந்தியை கைது செய்வோம் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மிரட்டலும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.