மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதை வாங்கியிருப்போம் என பிரேமலதா பேசினார்.
இந்தியாவில் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் இருந்து வருகிறது. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ என 3 பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே இந்த விருதை கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதை வாங்கியிருப்போம் என பிரேமலதா பேசினார். இது தொடர்பாக பிரேமலதா கூறியதாவது:-
விஜயகாந்திற்கு காலம் கடந்து பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பாக எங்களது நன்றிகளை கூறிக்கொள்கிறோம். ஆனால் எங்கள் கேப்டன் இருந்த போதே இந்த விருதை கொடுத்திருந்தால் மிகப்பெரிய சந்தோஷத்துடன் வாங்கி இருப்போம். கேப்டன் இறந்த பிறகு தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை நான் ஒட்டுமொத்தமாக கேப்டன் மீது அன்பு வைத்துள்ள தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் எங்கள் கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறோம். கேப்டன் கொடுத்த அன்பு, அவருக்கு பலமடங்கு அன்பு அப்படியே திரும்பி கிடைத்துள்ளது. இந்த அன்பு உள்ளங்களுக்கு பத்ம பூஷன் விருதை கேப்டன் சார்பில் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.
இளையராஜா மகள் பவதாரிணி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பவதாரிணியை சிறு வயதில் இருந்தே நான் பார்த்திருக்கிறேன். கேப்டனுக்காக பல பாடல்களை பவதாரிணி பாடியுள்ளார். அவருடைய இனிமையான குரலை இனிமேல் நாம் கேட்க முடியாது என்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு 47 வயது தான் ஆகிறது. பவதாரிணியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது உடல் சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்று அவரது இறுதி அஞ்சலியில் தேமுதிக சார்பில் கலந்துகொள்ள இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.