முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. அதில் இடம்பெற்ற ஆளுநா் உரையில் ‘முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கரையோரப் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்கு ஒரே தீா்வு’ என்று தெரிவிக்கப்பட்டது.
கேரள மாநில அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டிடிவி தினகரன், கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டுவதே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே தீர்வு எனவும், தமிழகத்துடன் சுமூக உடன்பாட்டிற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு மற்றும் நிபுணர் குழு பலமுறை மேற்கொண்ட ஆய்வில் முல்லைப் பெரியாறு பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திய பின்னரும் புதிய அணையை கட்டியே தீருவோம் என்ற கேரள அரசின் பிடிவாதப்போக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.