பவதாரிணி இறுதிச்சடங்கில் இளையராஜா குடும்பத்தினர் கடைசியாக தங்கள் வீட்டு இசை தேவதைக்கு அவர் பாடிய “மயில் போல பொண்ணு ஒண்ணு” பாடலை பாடி இறுதிச்சடங்கு செய்த காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மனங்களை கனக்க செய்துள்ளன.
இளையராஜாவின் மகள் பவதாரிணி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு தேனியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு சென்னையில் பிரபலங்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் நேற்று இரவு தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. இளையராஜாவின் பண்ணைபுரத்தில் உள்ள இல்லத்தில் பவதாரிணியின் இறுதிச்சடங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் இளையராஜா குடும்பத்தினர் கடைசியாக தங்கள் வீட்டு இசை தேவதைக்கு அவர் பாடிய “மயில் போல பொண்ணு ஒண்ணு” பாடலை பாடி இறுதிச்சடங்கு செய்த காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மனங்களை கனக்க செய்துள்ளன.
ராசய்யா படத்திற்கு இளையராஜா இசையமைத்துக் கொண்டிருந்த போது “மஸ்தானா மஸ்தானா” பாடலுக்கு வித்தியாசமான குரல் வேண்டும் என நினைத்த அவர் தனது மகள் பவதாரிணியை முதன் முதலாக பாடகியாக மாற்றினார். 1995ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ராசய்யா படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான “மஸ்தானா மஸ்தானா” பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பா, கோவா, மங்காத்தா, அனேகன் மற்றும் கடைசியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் இவர் பாடல் பாடியுள்ளார். பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றிய பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25ம் தேதி உயிரிழந்த நிலையில், தேனியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இளையராஜாவின் நண்பரான பாரதிராஜா பவதாரணியின் உடலை பார்க்க, தன்னால் நடக்க முடியாத நிலையிலும் தள்ளாடியபடி அங்கு வந்து பவதாரிணியின் உடலை பார்த்து, “பவ்தா அப்பா வந்திருக்கேன் மா” என்று கதறி அழுது கொண்டு இருந்திருக்கிறார். அப்போது தான் பெற்று, கையில் தூக்கி கொஞ்சி விளையாடி மகளின் உயிர் அற்ற உடலை பார்த்து.. சோகமும் துக்கமும் தன் நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தாலும், தன்னுடைய நண்பன் பாரதிராஜா அழும்போது பாரதிராஜாவுக்கு இளையராஜா ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டகத்தின் அருகிலேயே இளையராஜா அமர்ந்திருந்து தன்னுடைய மகளின் முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியாக சிறிது நேரம் பார்த்து இருக்க, பவதாரிணி சகோதரர்களும் சுற்றி நின்று பவதாரணியின் உடலை பார்த்து கண்கலங்கி கொண்டு இருக்கிறார்கள்.
இளையராஜாவின் சொந்த ஊரில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதிச்சடங்கின் போது பாரதி படத்தில் பவதாரிணி பாடி தேசிய விருது வென்ற “மயில் போல பொண்ணு ஒண்ணு.. கிளி போல பேச்சு ஒண்ணு.. குயில் போல பாட்டு ஒண்ணு.. கேட்டு நின்னு.. மனசு போன இடம் தெரியல.. அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல” பாடலை கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட இளையராஜாவின் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து பாடி இறுதிச்சடங்கு செய்த காட்சிகள் ரசிகர்களை உருகச் செய்துள்ளன. இசைக்குடும்பத்தின் இளவரசிக்கு இதை விட எப்படியொரு பிரியா விடை கொடுக்க முடியும் என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.